கரும்பை பற்றி
அறிவியல் பெயர் Saccharum Officinarum.
முதன்முதலாக நியூ கினியாவில் பயிரிடப்பட்டது.
கரும்பு உற்பத்தியில் பிரேசில், இந்தியா,சைனா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.
கரும்பில் 63-73 % தண்ணீரும், 12-16 % சர்க்கரையும், 11-16 % நார்ச்சத்தும், அயான்,கால்சியம்,பொட்டாசியம்,சோடியம் ஆகிய மினரல்களும் உள்ளது.
பன்முக உபயோகம் கொண்டதாக உள்ளது.
எங்கள் வயல் கரும்பு அறுவடை
சித்திரையில் பயிரிடப்பட்டு தை க்கு முன் (10 மாதம்) எங்கள் வயலில் கரும்பு அறுவடை செய்யப்பட்டது.
படிநிலை 1 தோகை அகற்றுதல்
15 நாட்களுக்கு ஒருமுறை தோகை அகற்றப்பட வேண்டும். அதுபோல கரும்புவெட்டுவதற்கு முன்பும் தோகை அகற்றப்பட வேண்டும். கடைசியாக அகற்றிய தோகை தண்ணீர் தெளித்து கரும்பு கட்டுவதற்கு பயன்படுத்தப் படுகிறது.
படிநிலை 2 கரும்பு வெட்டுதல்
வெட்டுவதற்கு தேவையான ஈரத்திற்கு தண்ணீர் விடப்படுகிறது. பின் கரும்புகள் ஒவ்வொன்றாக வேருடன் வெட்டி எடுக்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்படுகிறன.
படிநிலை 3 கரும்பு ராட்டுதல்
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட கரும்புகளின் வேரிலுள்ள மண் செதுக்கப்படுகிறது.
படிநிலை 4 தரம் பிரித்தல்
அவை யாவும் கூலக்கரும்பு அல்லது சச்சுக்கரும்பு அல்லது கல்சரைக் கரும்பு மற்றும் தரமான கரும்பு என இரண்டாக தரம் பிரிக்கப்பட்டு கட்டுமிடத்தின் அருகில் குவிக்கப்படுகிறது.
படிநிலை 5 கரும்பு கட்டும் அமைப்பை உருவாக்குதல்
மூன்று பெரிய உருளைக் கட்டைகளும் ஆறு அச்சுக் கம்புகளும் கொண்ட இந்த அமைப்பானது படத்தில் கண்டவாறு அமைக்கப்படுகிறது.
படிநிலை 6 கரும்பு கட்டுதல்
கட்டுக்கு பத்து கரும்புகள் வீதம் கட்டப்படுகிறது.
1 - குவிக்கப்பட்ட தரமான கரும்புகளிலிருந்து மூன்று கரும்புகள் முதலில் வைக்கப்படுகிறது.
2 - அதே மாதிரியான இரண்டு கரும்புகள், முன் வைக்கப்பட்ட கரும்புகளின் இருபக்க ஓரத்திலும் வைக்கப்படுகிறது.
3 - அதன் இடையில் இரண்டு கூலக் கரும்புகள் வைக்கப்படுகிறது.
4 - அதன் மேல் மூன்று தரமான கரும்புகள் வைக்கப்படுகிறது.
5 - வேரிலிருந்து தோகை வரை 4 அல்லது 5 இடத்தில் கரும்பு தோகையால்
கட்டப்படுகிறது. கட்டும்போது தொகையை உள்ளழுத்த சிறிய செதுக்கிய கோல் பயன்படுத்தப்படுகிறது.
6 - பின் தூக்கப்பட்டு அருகில் அடுக்கி வைக்கப்பட்டு மூடிவைக்கப் படுகிறது.
படிநிலை 7 ஏற்றுமதி
அடுக்கி வைக்கப்பட்ட கரும்புக் கட்டுகள் எண்ணிக்கையுடன் வியாபாரிக்கு அளிக்கப் படுகிறது.
கரும்பு வியாபாரம்
ஓர் விவசாயி ஏன் நேரடியாக கரும்பு வியாபாரத்தில் இறங்கக் கூடாது? இந்த சந்தேகம் பலருக்கு எழலாம். சில விவசாயிகள் இதனை செய்கிறார்கள். துணிந்தவர்கள் செய்யலாம். ஆனால் எல்லா நேரமும் வெற்றி கிட்டுமென சொல்லிவிட முடியாது.
எங்கள் ஊரில் 30-40 வருடங்களுக்கு முன்னரெல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் புதுக்கோட்டை சந்தையன்று கரும்பை வெட்டி கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டுபோய் விற்றிருக்கிறார்கள். என் தாத்தா ஒருமுறை இரவு சாப்பிட்டால் செலவாகுமென பஃப்ஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு தண்ணீரைக் குடித்து விட்டு பனியில் கட்டை வண்டி நுகத்தடியில் படுத்திருந்தாராம். நடு சாமத்தில் கெண்டைக் காலை பிடித்துக் கொண்டதாம். அந்த வலியோடு வீடு திரும்பியிருக்கிறார். இன்னொரு முறை கரும்பு சுத்தமாக விற்கவே இல்லையாம். திருவப்பூரில் லக்ஷ்மி ஜவுளிக் கடை ஓனர் நாகையா ஒரு ஓட்டை சைக்கிளில் வந்து, 'என்னடா..விக்கெவே இல்லையா? கொண்டு போய் என் வீட்ல இறக்கு. நான் வித்துத் தர்றேன்' என்றாராம். அவரின் மகன் வீட்டில் படுக்கக் கூட இடமில்லை இறக்கக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். பின் நாகையா வந்து வீட்டினுள் இறக்கிவைத்து, ஜவுளிக் கடையில் கூறு போட்டு விற்றுக் காசு கொடுத்தாராம்.
சில நேரங்களில் அதிக வருமானம் கிடைக்கலாம். ஆனால் பல நேரங்களில் மண்ணைக் கவ்வ வேண்டியிருக்கிறது. ஆனால் வியாபாரிகளுக்கு இது வந்தா மலை போனா மயிர் என்பது போலதான். அவர்கள் அதிகபட்சம் இது மட்டுமே வருமானம் இல்லையெனும் சூழ்நிலையில் சமாளித்து விடலாம். ஆனால் அவர்களுக்கும் நஷ்டம் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.
லாட்டரி சீட்டும் கரும்பு வியாபாரமும் ஒன்று என்பார்கள்.
கரும்பு வயலில் விற்காமல் இருப்பது ஒருவித அவமானமாக விவசாயிகள் கருதுகிறார்கள். கரும்பு வெட்ட ஆகும் செலவு, வண்டிக்கூலி, ஆள் கூலி என இவ்வளவு கஷ்டம் ஏன் பட வேண்டும் என்பதாலேயே வந்த விலைக்கு வியாபாரியிடம் விற்று விடுகிறார்கள் விவசாயிகள்.
எங்கள் வயலில் கரும்பு ஒரு கட்டு 140 என்று வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் வெளியில் 300க்குக் கூட விற்றிருக்கலாம். ஆனால் பஞ்சப்பாட்டு பாடாமல் பத்து ரூபாயையும் லாபமாகக் கருதுவதே புத்திசாலித்தனம்.
கரும்பு இந்த வருடம் வியாபாரிகளை ஏமாற்றி விடவில்லை. ஜல்லிக்கட்டு அறிவிப்பும் ரேஷன் கடை கரும்பும் இதற்கு காரணமாக இருக்கலாம்.நகரத்தில் இருப்பவர்களுக்கு இந்த வருட கரும்பு விலை நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் மோடி பொங்கலன்று மன்னிக்கவும், தைப்பொங்கலன்று சற்று மந்தமாகவே வியாபாரம் இருந்தது.(மோடி பொங்கல்தான் மோசம்போயிடுச்சே)
அடுத்த வருடம் என்ன நடக்கும் என்று எவனுக்கும் தெரியாது. வேணுமென்றால் நடந்த பிறகு சொல்லலாம்.
மேலும் சில புகைப்படங்கள்
முருகையா. என் தாத்தா.
சுப்பிரமணியன். கோட்டையூர். நல்ல மனிதர். இவரிடம்தான் நான் முதன் முதலாக பேரம் பேசி கட்டு 140 என 1000 கரும்பு விற்றேன். நல்ல அனுபவம். இவர் சிங்கப்பூரில் போர்மேனாக இருந்தவர். அவர் தலையை பார்த்தாலே கண்டறிந்து விடலாம். இப்போது டாடா ஏஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவர் சாமியாடி. 'சாமி என்னை அங்கே இருக்க விடவில்லை, அதான் வந்துட்டேன்' என்பார்.
கரும்பை பாதுகாப்பதற்காக அறுவடைக் காலத்தில் உருவாக்கப்படும் தற்காலிக கட்டில் குடில். உள்ளிருப்பவர் என் மாமா பழனிச்சாமி.
இதனுள் ஓர் இரவு 3 மணி நேரம் இருந்தது அற்புதமான அனுபவம். துணையிருந்தது ஒரு போர்வையும் ஜேசுதாஸின் குரலும்.
பணியாறிய பின் பனியாரம். டீயுடன்.
மாமரத்தடியில் மதிய உணவு.
தனசேகரும் ரக்ஷனாவும்.
முருகன். கொத்தனார். இவரின் இன்னொரு தொழில் வயிரை புண்ணாக்குவது. கரும்பு கட்டு கட்டுவதில் வல்லவர்.
கரும்பங்கொல்லை பொம்மையுடன் சரவணன். குடும்ப நண்பர். புகைப்படம் எடுக்க Samsung Grand கொடுத்து உதவியவர்.
அறுவடைக்குப் பின். மீதியுள்ளவை அடுத்த தலைமுறைக்கு.
வேற யாருமில்ல.....